Wednesday, 13 June 2007

மீண்டும் SEZ

விவசாயிகளின் SEZ எதிர்ப்பு போராட்டத்தை கையாள மேற்கு வங்க அரசும் JSW Steel நிறுவனமும் சேர்ந்து ஒரு புது மாதிரியான திட்டத்தை முன் வைத்திருக்கிறார்கள். இந்த திட்டத்தின்படி SEZ’க்காக நிலம் கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் அந்த நிலத்திற்கான பணத்தை தருவதுடன் அவர்களின் குடும்பத்திலிருந்து ஒருவருக்கு அங்கு கட்டப்படும் தொழிற்சாலையில் வேலை வழங்கப்படும். மேலும் நிலம் கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் அந்த தொழிற்சாலையின் பங்குகளும் அளிக்கப்படும்

இதில் இரண்டு விஷயங்கள். ஒன்று நிலத்தை இழந்தாலும் அங்கே கட்டப்படும் நிறுவனத்தில் வேறு வேலை கிடைப்பதால், இதுவரை விவசாயத்தை மட்டுமே நம்பி குடும்பம் நடத்தி வந்த மக்களுக்கு ஒரு புது வாழ்க்கை கிடைக்க வழி பிறந்திருக்கிறது.

இரண்டாவது அந்த தொழிற்சாலையின் பங்குகள் அளிக்கப்படுவதால் நிலம் கொடுக்கும் ஒவ்வொருவரும் அங்கு கட்டப்படும் தொழிற்சாலையில் பங்குதாரர்களாகின்றனர். இதனால் நிலம் கையை விட்டு போனாலும் அதற்கு சமமாக ஒரு நிறுவனத்தின் பங்குகள் அவர்களிடம் வந்து சேருகிறது.

இதுவரை விவசாயம் மட்டுமே செய்து வந்த மக்களுக்கு அந்த தொழிற்சாலையில் என்ன மாதிரி வேலை கிடைக்கும் என்பது இன்னும் சரியாக தெரியவில்லை. எப்படியிருந்தாலும் இந்த திட்டம் குறைந்தபட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காவது வழி வகுக்கும். இந்த யோசனை சற்று காலதாமதமானதுதான் என்றாலும் “Better Late than Never” என்றுதான் நினைக்க தோன்றுகிறது.

இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் காப்பாற்றப்படுவார்கள். சந்தோஷம்!!
ஆனால் விவசாயம்? அதை எப்போது காப்பாற்றப்போகிறோம்??

4 comments:

Voice on Wings said...

இந்த ஏற்பாட்டில் நிலமற்ற கூலி விவசாயிகளுக்கு எவ்விதத்தில் அவர்களது இழப்பு ஈடு செய்யப்படுகிறது? நிலத்திற்குச் சொந்தக்காரர்களாக இல்லாவிட்டாலும், தலைமுறை தலைமுறையாக தங்கள் விவசாயத் தொழிலைச் செய்து வருபவர்கள் என்ற வகையில் அவர்களும் அந்நிலப்பகுதியின் stakeholders தானே?

பிரசாத் said...

நியாயமான வருத்தம்தான்!
இருப்பவர்களையே கண்டுகொள்ளாத அரசு இழப்பதற்கு ஒன்றுமில்லாதவர்களையா கண்டு கொள்ளப்போகிறது?

ஒன்றுமில்லாதவர்கள் என்று நான் குறிப்பிடுவது அரசாங்கத்தால் மதிக்கப்படும் பொருள் எதுவும் வைத்திராதவர்கள் என்ற காரணத்தால் மட்டுமே, மற்றபடி அவர்களும் அந்த பகுதியின் stakeholders என்ற உங்களின் கருத்தை நானும் ஒப்புக்கொள்கிறேன்.

ஆனால் யோசித்துப் பார்த்தால் தொழிற்சாலைகள் உண்டாக்கும் Indirect Jobs ஏராளம். அதாவது ஒரு தொழிற்சாலை வருவதனால் அதை சுற்றி உருவாகும் எண்ணற்ற கடைகள், ஆட்டோக்கள், Hotel’கள், விடுதிகள் போன்றவற்றால் பலதரப்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. இது தவிர அதே தொழிற்சாலையில் உருவாகும் Contract வேலைகளும் உண்டு. நிலமற்ற கூலி விவசாயிகளுக்கு விவசாயத்தால் கிடைக்கும் வாய்ப்புகளை விட தொழிற்சாலைகளால் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். எவ்வளவு மோசமாக நினைத்து பார்த்தாலும் குறைந்தபட்சம் அவர்கள் வாழ்க்கைத்தரம் மாறாமலாவது இருக்கும்.

ஆனால் நிலம் வைத்திருப்பவர்கள் கதை வேறு! நிலமிருக்கும் வரை கௌரவத்திற்காகவாவது அவனும் ஒரு முதலாளி! ஆனால் இந்த தொழிற்சாலைக்காக சில லட்சங்கள் கொடுத்து அவனையும் கூலித்தொழிலாளியாக்கப் பார்த்தால் அது நியாயமாகாது. இங்கு அவன் வாழ்க்கைத்தரம் குறைக்கப்படுகிறது! அதனால்தான் பங்குகளுடன் ஒரு நிரந்தர வேலையும் அளிக்கப்படும் பட்சத்தில் மீண்டும் அந்த கௌரவ முதலாளி பட்டத்திற்கு அவன் ஏற்றவனாகிறான்.

நிச்சயம் தொழிற்சாலையின் வருகையால் வேறு பல கேடுகளும் உள்ளன என்பதை மறுப்பதிற்கில்லை. ஆனால் அரசாங்கமும் நிலமிழப்பவர்களும் ஒன்று சேர்ந்து விடும் பட்சத்தில் இந்த கட்டாய மாற்றத்தை ஏற்றுக் கொள்வதை விட அவர்களுக்கு (கூலி விவசாயிகளுக்கு) வேறு வழி இருப்பதாக எனக்கு தோன்றவில்லை!

பின்குறிப்பு: உங்களுக்கு வேறொன்றை சொல்ல வேண்டும். என் சொந்த ஊர் கரூரிலிருந்து 18 k.m தொலைவில் உள்ளது (காவிரி ஆற்றிலிருந்து வெறும் 4 k.m). அங்கு விவசாயத்தின் நிலை என்ன தெரியுமா? கரும்பும் நெல்லும் பயிரிட்டு வந்த பெரும்பாலான மக்கள் இன்று தென்னைக்கு மாறி விட்டனர். காரணம்? நெல்லுக்கும் கரும்புக்கும் விவசாயக் கூலிக்கு ஆள் கிடைப்பதில்லை.

அதற்காக கூலி வேலைக்கு ஆளே இல்லை என அர்த்தமில்லை. கூலி வேலைக்கு செல்லும் மக்கள் எல்லாம் விவசாயத்தை விட்டு Textile mill, construction works போன்ற வேலைகளுக்கு மாறி விட்டனர். “விவசாயத்தை விட அதிக வருமானம்”, “நிழலிலிருந்து அதிக சிரத்தையில்லாமல் செய்யக்கூடிய வேலை”, முக்கியமாக “நிரந்தரமான வருமானம்” இப்படி பல காரணங்களை சொல்லலாம்.

ஆனால் மேலே சொன்ன கௌரவ முதலாளிகளின் (நிலமிருக்கும் விவசாயிகள்) பாடுதான் திண்டாட்டம். கூலி வேலைக்கும் செல்ல முடியாமல் விவசாயத்தையும் தொடர முடியாமல் அவர்கள் தவிப்பது துயரமான ஒன்று.

ஆப்பசைத்த குரங்காவது ஆப்பசைத்ததால் வெளியேற முடியாமல் போனது, ஆனால் இவர்களெல்லாம் விவசாயியாய் பிறந்ததை தவிர வேறு எந்த தவறும் செய்ததில்லை!
இருந்தும் வெளியேற முடிவதில்லை...

பின்குறிப்பிற்கு ஒரு பின்குறிப்பு: எங்கள் ஊரிலிருந்து வேலைக்கு வந்து செல்ல ஒரு Textile நிறுவனம் கூலித் தொழிலாளிகளுக்கு பேருந்து வசதியெல்லாம் செய்து கொடுத்திருக்கிறது. விவசாயத்தில் இதெல்லாம் நடக்குமா??

Voice on Wings said...

விவசாயக் கூலி வேலையை விட அதிகமான தொழிலாளர் வேலைகள் உண்டாகும்ன்னா அதை வரவேற்க வேண்டியதுதான். ஆனா இன்றைய நவீனத் தொழிற்சாலைகளில் அதிகமான தொழிலாளர்கள் தேவைப்படாததால அப்புறப்படுத்தப்படும் அனைத்து விவசாயக் கூலிகளுக்கும் வேலை உத்தரவாதம் கிடைக்குமான்னு சந்தேகமாதான் இருக்கு.

பின்குறிப்புக்கு பின்குறிப்பெல்லாம் விடுங்க - ஏதோ சொந்த ஊர் கரூர் பக்கம்ன்னு சொன்னீங்களே........ எங்க குடும்பமும் சில தலைமுறைகளுக்கு முன்னால அந்தப் பகுதியிலயிருந்து வந்ததுதான். நெரூர்ன்னு கேள்விப்பட்டிருப்பீங்க...... அங்க விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருந்தவங்கதான் என் முன்னோர்களும். அப்பறம் படித்து நகரங்களுக்கு வந்த பிறகு சுத்தமா ஊரோட தொடர்பே விட்டுப் போச்சு. நான் அந்த ஊருக்கு போனது கூட கிடையாது. இது சும்மா சொந்தக் கதை. இதுக்கும் விவாதத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது :)

பிரசாத் said...

//ஆனா இன்றைய நவீனத் தொழிற்சாலைகளில் அதிகமான தொழிலாளர்கள் தேவைப்படாததால அப்புறப்படுத்தப்படும் அனைத்து விவசாயக் கூலிகளுக்கும் வேலை உத்தரவாதம் கிடைக்குமான்னு சந்தேகமாதான் இருக்கு.//

உங்களுக்கு சந்தேகமே வேண்டாம் நிச்சயமா அவர்கள் நிம்மதியாக வாழ வழி பிறக்கும்'னு சொல்ல ஆசையாத்தான் இருக்கு. ஆனால் ஏழைகளின் மேல் நாமும், நம் அரசும் காலங்காலமாக கொண்டுள்ள அக்கறையை பார்க்கும்போது எந்த விஷயத்தையும் அடித்து சொல்ல தைரியம் வருவதில்லை!

//அங்க விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருந்தவங்கதான் என் முன்னோர்களும். அப்பறம் படித்து நகரங்களுக்கு வந்த பிறகு சுத்தமா ஊரோட தொடர்பே விட்டுப் போச்சு //

கிட்டத்தட்ட அதே நிலையைத்தான் இன்று கிராமங்களில் இருப்பவர்களும் விரும்புகிறார்கள். இந்த தலைமுறையில்தான் மாட்டிக்கொண்டோம் நம் அடுத்த தலைமுறையாவது படித்து முடித்து நிம்மதியான ஒரு வேலையை தேடிக்கொள்ளட்டும் என்ற மன நிலையில்தான் பெரும்பாலானோர் இருக்கிறார்கள். இப்படியே போனால் இன்னும் ஓரிரு தலைமுறைகளில் கிராமத்திலிருந்து நகரத்துக்கு மாற யாருமே இருக்கு மாட்டார்கள் போல!!! :(

ஆமாம் வளர்ந்த நாடுகளில் இது போன்ற பிரச்சனைகளை எப்படி சமாளித்தார்கள்?

இந்தியாவில் மட்டும்தான் இப்படியா அல்லது உலகமெங்கும் விவசாயிகளின் நிலை திண்டாட்டம்தானா?