தொலைந்து போன பொறுமை
ஒரு சில மாதங்களுக்கு முன்னால் விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்தேன். இரண்டரை வயதான என் உறவுக்கார தங்கை வீட்டுக்கு வந்திருந்தாள். சில சமயம் உறவுகளில் இது போன்ற குழப்பங்கள் நிகழ்வதுண்டு. என்னை விட வயதில் சிறியவன் எனக்கு மாமா முறை ஆனதெல்லாம் உண்டு. நல்லவேளையாக அவனை மாமா என்று அழைக்க வேண்டும் என யாரும் வற்புறுத்தவில்லை. சரி விஷயத்திற்கு வருவோம்.
வீட்டில் இருந்தவள் ஏதோ விளையாண்டு கொண்டிருக்க நான் என் mobile’ல் sudoku விளையாண்டுக் கொண்டிருந்தேன். சற்று நேரம் என்னை உற்று நோக்கியவள் மழலைக்குரலில் “அண்ணா என்ன பன்றீங்க” என்றாள். “Game வெளையாண்டுக்கிட்டுருக்கேன் பாப்பா” என்றேன். சரியென தலையசைத்து விட்டு மீண்டும் விளையாட சென்று விட்டாள்.
ஒரு ஐந்து நிமிடம் ஆகியிருக்கும் என்னிடம் திரும்ப வந்தாள். என்னைப் பார்த்து மீண்டும் “அண்ணா என்ன பன்றீங்க”என்றாள். நானும் மீண்டும் “Game வெளையாண்டுக்கிட்டுருக்கேன்” என்றேன். சரியென சென்றவள் மீண்டும் ஐந்து நிமிடத்துக்குள்ளாகவே வந்தாள். வந்தவள் மீண்டும் “அண்ணா என்ன பன்றீங்க” என்றாள். “Game வெளையாண்டுக்கிட்டுருக்கேன்னு சொல்றேன்ல” என்றேன் எரிச்சலுடன். தலையசைத்துவிட்டு சென்று விட்டாள்.
அவள் கஜினி முகமதுவின் பரம்பரையாக இருக்க வேண்டும். அடுத்த ஐந்து நிமிடத்துக்குள்ளாகவே மீண்டும் வந்து அதே கேள்வியை திரும்ப கேட்டாள். அவ்வளவுதான் அதற்கு மேல் என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை “சொல்ல முடியாது...பே…” என்றேன். அவள் முகம் சட்டென மாறி விட்டது. ஏதும் சொல்லாமல் சென்று விட்டாள்.
இதை கவணித்துக் கொண்டிருந்த என் அம்மா “நீ கொழந்தையா இருந்தப்ப இந்த மாதிரி எத்தனை தடவை கேட்டிருக்க தெரியுமா?”என்றார். சட்டென ஏதோ உறைத்த மாதிரி இருந்தது.
அந்த இரண்டரை வயது பிஞ்சுக்கு கேள்வி கேட்பதில் இருந்த பொறுமையில் பாதி கூட பதில் சொல்வதில் எனக்கு இல்லை. நானும் சிறு வயதில் அவளைப் போல பொறுமையாகத்தான் இருந்திருக்கிறேன். வளர்ச்சியின் வேகத்தில்தான் எங்கோ அதைத் தொலைத்து விட்டேன்.
மீண்டும் வந்து அவள் வந்து அதே கேள்வியை கேட்டால் பொறுமையாக பதிலளிக்க வேண்டும் என முடிவு செய்து காத்திருந்தேன். ஆனால் அவள் திரும்ப வரவே இல்லை. ஒருவேளை என்னுடைய செய்கையால் அவள் கேள்வி கேட்கும் பொறுமையை தொலைத்து விட்டிருப்பாளோ???
1 comment:
மகிழ்ச்சியெனில்
மத்தாப்பாய் சிரிக்கிற
துன்பமெனில்
அடைமழையாய்
கொட்டித்தீர்க்கிற
மழலை மனசு வேண்டும்.
அம்மாவின் அதட்டல்களை மீறி
புழுதிப் பறக்க
தெருவில் விளையாடி
தூக்கம் வெறுக்கிற
பிள்ளையின் சுறுசுறுப்பு வேண்டும்.
கோபமெனில் - உடனே
சண்டை பிடிக்கிற
மறுநிமிடம் மறந்து கூடுகிற
பிள்ளையின் மறதி வேண்டும்.
புதிய பொருளெனில்
விழிகள் விரிய
வியந்து பார்க்கும்
குடைந்து குடைந்து
ஆயிரம் கேள்விகள் கேட்கும்
பிள்ளையின் ஞானம் வேண்டும்.
இறந்த கால நினைவுகளில்
எதிர்கால திட்டங்களில்
நிகழ்காலத்தை தொலைக்காத
பிள்ளையின் வாழ்வு வேண்டும்.
குழந்தைகளை நேசிக்காத
சமூகம்
தற்கொலையின் விளிம்பில்.
குழந்தைகளிடமிருந்து - முதலில்
கற்றுக்கொள்வோம்.
சாதி, மதம்,
சடங்கு குப்பைகளை - பிறகு
கற்றுக்கொடுப்போம்.
Post a Comment